வெள்ளி, 7 அக்டோபர், 2016

தன் போராட்ட வாழ்வில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் என்ற சிறப்பு பெற்றவர் ம.பொ.சி.

தமிழ்நாடு நாடார் சங்கம்

மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன், மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை உரிமைக் கொண்டாடி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் 'அபாய' கோரிக்கை. அரசியல் களத்தில் இது பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து மீண்டும் புறப்பட்ட அந்த தலைவர். எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டார். இப்படி தமிழக எல்லை வரலாற்றில் தவிர்க்கவியலாத அந்த தலைவர் ம.பொ.சி என்கிற ம.பொ.சிவஞானம்.

இன்றைய ஆன்ட்ராய்டு தலைமுறைக்கு இந்த அரிய வரலாறு தெரியுமா என்பது தெரியவில்லை. அவரது நினைவுநாள் இன்று.



திருப்பதியும், திருத்தணியும் நம் கைவிட்டுப்போகும் நிலையில் தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதை முடக்கியவர் ம.பொ.சி. ஆனால் இறுதியாக திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி. 'தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்' என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச்செய்தவர் அவர்.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906 ம் ஆண்டு ஜுன் 26 ம் தேதி பிறந்த ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலினால் 3-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். இளம்வயதிலேயே நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார். பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என்று ஆயிற்று.

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைவாசம் சென்ற ம.பொ.சிக்கு 31 வயதில் திருமணம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் சிறந்த சொற்பொழிவாளராகத் அக்காலத்தில் திகழ்ந்தார். தன் போராட்ட வாழ்வில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் என்ற சிறப்பு பெற்றவர் ம.பொ.சி.

1946 ம் ஆண்டில், காங்கிரஸில் இருந்தபடியே தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கி தமிழர்கள் வாழ்வுக்கான போராட்டங்களையும் வலுவாக நடத்திவந்தார். காங்கிரஸை எதிர்க்கிறவர்கள் யாரையும் தன்னுடைய எதிரியாக வரித்துக்கொண்டு அரசியல் செய்த ம.பொ.சி, ஒருகட்டத்தில் காங்கிரசின் பாட்டாளி விரோதப் போக்கு மற்றும காந்திய கொள்கைகளை கைகழுவிடும் போக்கினை கண்டு மனம் கசந்தார். அதன் விளைவாகவே தமிழரசு கழகத்தை உருவாக்கி நடத்திவந்தார்.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எந்த தியாகத்தையும் செய்திடும் உறுதிமிக்கவர் ம.பொ.சி. காங்கிரஸ் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் நடத்தப்பட்டது.
'மாமன் கடை முன் மறியல்'

கள்ளுத்தொழிலில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுவந்த சமயம் அது. காந்தியின் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்திக்கொண்டவரான ம.பொ.சி, தன் கொள்கைக்காக வீதிவிதியாக சென்று கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்தார். கள்ளுக்கடைகள் மூடப்பட்டால் முதல் ஆபத்து அவரது குடும்பத்தினருக்குத்தான் என்றாலும், தன் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.

உச்சகட்டமாக, கள் தொழிலில் அந்நாளில் பிரபலமாக விளங்கிய அவரது தாய்மாமன் கடைமுன்னேயே மறியல் நிகழ்த்தி, உறவினர்களின் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார்.


1939-ம் ஆண்டு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி யின் புகழ்பரப்பும் பணியை செய்தார் ம.பொ.சி.. அவரது வரலாற்றை நுால்களாக எழுதி, வ.உ.சியின் தியாகங்களை உலகறிய செய்தார் . ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலை தழுவித்தான் கப்பலோட்டிய தமிழன் என்னும் சிறந்த திரைப்படம் உருவானது என்பார்கள்.

ஒருமுறை வ.உ.சிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ம.பொ.சி. நிதி உதவி கேட்டுச் சென்றபோது, கட்சியின் பெரிய மனிதர்கள் நழுவிக்கொண்டது அதிர்ச்சியளித்தது அவருக்கு. எனினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, அன்றைய ஹாமில்டன் வாராவதி சந்தையில் வசித்த எளிய மனிதர்களிடம் கையேந்தி, சில தொழிலாளர் சங்கங்களின் உதவியோடு அந்த சிலையை நிறுவினார்.

3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி, பின்னாளில் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்கப் பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.

1950-ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது.


தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையை பாராட்டி, பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை வழங்கினார்.

பின்னாளில் பல காரணங்களால் அவர் காங்கிரசுடன் முரண்படநேர்ந்தது. ஆகஸ்ட் 8, 1954-ம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். தமிழரசு கழகம் முன்னைவிட வேகம் பெற்று இயங்கியது.
'நாட் அல்ல நாடு'

அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்துக்கு, 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் ம.பொ.சி.

அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்த பெயர் மாற்றத்துக்குப் பின்னணியாக இருந்த தலைவர் அவர் என்பதே அண்ணாவின் பாராட்டுக்கு காரணம். அவரின் கடந்த காலபோராட்டங்களால்தான் தமிழ்நாடு என்ற அழகுபெயர் கிடைத்தது நமது மாநிலத்துக்கு.

அதன்பின் சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு. ம.பொ.சி (1967-71 காலகட்டம்)சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராக பணியாற்றியபோதுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் tamilnad அதாவது 'டமில் நாட்' என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார்.


இதை ஏற்றுக்கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார். ம.பொ.சியின் உறுதியை கண்டு அப்படியே ஏற்றுக்கொண்டார் அண்ணா.

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப்பிரமுகர்கள் பலர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம் பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி இன்னும்பலர்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றினார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.
மேலவையை மெருகேற்றிய அறிஞர் ம.பொ.சி

1966-ல் ம.பொ.சியின் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972-ம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி "பத்மஸ்ரீ" விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தினரிடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை அறிஞர் பெருமக்களால் சிறப்பு பெற்று இயங்கியது.


தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி இதேநாளில் உடல்நலம் குன்றி தனது 89 வயதில் காலமானார். 2006-ல் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது

"அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவஞானம். தத்துவஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தத்துவஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனை தாங்கிக் கொண்டு தருமநெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலை தரும். இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்" என்று ம.பொ.சி தன் வாழ்க்கை வரலாற்று நுாலில் குறிப்பிட்டார்.

இன்றைய அரசியல் நிகழ்வுகளை ம.பொ.சியின் இந்த வார்த்தைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ம.பொ.சி எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி என்பதை உணரமுடிகிறது.

- எஸ்.கிருபாகரன்


03/10/2016
2 Photos - View album

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக